search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய ஒளி"

    • தூத்துக்குடியில் உள்ளது ஆவுடைஅம்பாள் உடனுறை திருமூலநாதர் கோவில்.
    • சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் மிகவும் பழமை வாய்ந்த ஆவுடைஅம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது.

    மகா சிவராத்திரி நாளில் சிவனடியார்கள் வணங்கும் நவகைலாய சிவாலயங்களைப் போல் நவலிங்கபுரம் என்று அழைக்கப்படும் சிவாலயங்களில் முதலாவது சிவாலயம் என்றும், முப்பீட தலங்களில் முக்கியமான சிவாலயம் என்ற பெருமையும் இந்தக் கோவிலுக்கு உண்டு.

    ஆண்டு தோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய சூரியன் வடதிசை நோக்கிப் பயணிக்கும் உத்தராயண காலத்தில் மார்ச் 21,22, 23 தேதிகளிலும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தெற்கு நோக்கிச் சூரியன் பயணிக்கும் தட்சிணாயன காலத்தில் செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் இந்தக் கோவில் மூலவர் திருமூலநாதர் மீதும் ஆவுடை அம்பாள் மீதும் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதற்கு ஏற்றபடி இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று காலை சூரிய உதய நேரத்தில் சிவனடியார்களும் ஊர்ப்பொதுமக்களும் இந்த அதிசய நிகழ்வைக்கண்டு திருமூலநாதரைத் தரிசிக்கத் திரளாகக் கூடினர்.

    சரியாக 6.03 மணிக்குக் கிழக்கில் உதயமான சூரியக்கதிர்கள் மெல்ல மெல்லகோவிலுக்குள் நுழைந்து மூலவர் மீது பட்டு ஒளி வீசியது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தரிசித்த சிவனடியார்களும் பொதுமக்களும் எம்பெருமானின் திருக்கைலாயக்காட்சியாக நினைத்து அரகர மகாதேவா, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவ கோஷமுழக்கமிட்டனர்.

    பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளைக் கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளைத் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.

    • சூரிய ஒளி கதிர்கள் மூலவர் மீது பட்டுச்செல்லும் நிகழ்வு 10 நாட்கள் நடைபெறும்.
    • பக்தர்கள் நமசிவாய கோஷம் முழங்க சூரிய பகவானோடு முக்தீஸ்வரரை வழிபட்டனர்.

    கோவில்களின் கருவறையிலுள்ள மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள் படுவதை சூரிய பூஜை கோவில்கள் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு சூரிய பூஜை கோவில்கள் இருந்தன. தற்போது ஒரு சில கோவில்களே உள்ளன. அந்த வகையில் மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் சூரிய பூஜை கோவிலாகும்.

    இங்குள்ள கருவறைக்கு நேர்எதிரே உள்ள 3 துவாரங்கள் வழியாக சூரிய ஒளி கதிர்கள் ஊடுருவி முக்தீஸ்வரப் பெருமானை தழுவி செல்லும். இந்த அதிசய அரிய நிகழ்வு வருடத்திற்கு 2 மாதங்கள் நடைபெறுகிறது. முதலாவதாக மார்ச் மாதத்தில் 11-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் காலையில் 6.35 மணி முதல் 6.45 மணி வரை ஒரு முறையும் 7 மணி முதல் 7.10 மணி வரை ஒரு முறையும் ஒரு நாளைக்கு 2 முறை என 23-ந் தேதி வரை சூரிய ஒளி பூஜை நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 19-ந் தேதி முதல் 30 -ந் தேதி வரை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை ஒரு முறையும் 6.40 மணி முதல் 6.50 மணி வரை 2-வது முறையும் சூரிய பூஜை நடைபெறும். இந்த சூரிய ஒளி கதிர்கள் மூலவர் மீது விழும் நிகழ்வு இந்த ஆண்டு நேற்று காலை முதல் தொடங்கியது. காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை சூரிய ஒளி மேகமாக இருந்ததால் வர வில்லை. இதனைத் தொடர்ந்து 6.40 மணி முதல் 6.50 வரை சூரிய ஒளி துவாரங்கள் வழியே நந்தி பெருமானை கடந்து மூலஸ்தானத்திற்கு சென்ற படர்ந்தது. தொடர்ந்து சூரிய பூஜை நடந்தது.

    சிறப்பு அபிஷேகம்

    தொடர்ந்து மூன்று துவாரங்களில் இருந்தும் வரிசையாக ஒவ்வொரு ஒளி கதிர்களாக மூலவர் மீது பட்டுச்செல்லும் நிகழ்வு 10 நாட்கள் நடைபெறும். நேற்று சூரிய பூஜை நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் நமசிவாய நமசிவாய என கோஷங்கள் முழங்க சூரிய பகவானோடு முக்தீஸ்வரரை வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    • உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது.
    • கோவிலுக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டியில் புகழ்பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நீலகிரி எம்.பி ராசா, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதுபோல் கோவில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி பக்தர்கள் பங்களிப்பில் கோவில் கர்ப்பகிரகம், சன்னதி, மண்டப உட்பகுதி உள்ளிட்டவற்றில் 16 சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.8 லட்சம் ரூபாய் செலவில் சோலார் மின் தகடு அமைக்கப்பட உள்ளது. கோவிலுக்கு வேண்டிய மின்சாரத்தை இதன் மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • இன்று சூரிய ஒளிக்கதிர்கள் காசி விஸ்வநாதரை தனது ஒளிக்கற்றைகளால் பிரதிபலிக்கச் செய்தது.
    • 3 நாட்கள் (நாளை மற்றும் நாளைமறுநாள்) சூரியோதயத்தின்போதும் இந்த வழிபாடு நடைபெறும்.

    திருச்சியை அடுத்த கல்லணை சாலை, சர்க்கார் பாளையம் கிராமத்தில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் செல்லும்போது சர்க்கார்பாளையத்தில் இளைப்பாறியதாக வரலாறு கூறுகிறது.

    அப்போது, இறைவன் அவரது கனவில் தோன்றி கோவில் அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு கோவில் கட்டியதாகவும், அதனையடுத்தே கல்லணை கட்டப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்ததும், திருவாணைக் காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி அம்மன் கோவிலின் சார்பு கோவிலான, இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரியபூஜை வழிபாடு சிறப்பு வாய்ந்தது.

    வருடத்தில் வேறு எந்த நாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாக விழும். இச்சமயத்தில் இறைவனை வழிபாடு செய்தால் திருமணத்தடை, பிணிகள் நீங்கி பல நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் ஆவணி மாதம் 7-ம் நாளான இன்று (23-ந்தேதி) காசி விஸ்வநாதர் கோவிலில் சூரிய ஒளிக்கதிர்கள் மெல்ல, மெல்ல வந்து காசி விஸ்வநாதர் மூலவரை தனது ஒளிக்கற்றைகளால் பிரதிபலிக்கச் செய்தது. அதனைத்தொடர்ந்து சூரிய வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் காசிவிஸ்வநாதருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திருச்சி மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து பக்தியுடன் வழிபட்டனர்.

    3 நாட்கள் சூரியோதயத்தின்போதும் இந்த வழிபாடு நடைபெறுவதால் நாளை மற்றும் நாளை மறுதினம் கோவிலில் தங்கி வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    • ஆண்டுக்கு 2 முறை இந்த கோவில் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரிய ஒளி படும்.
    • பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி சவுந்தரவல்லி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரியன் தனது கதிர்களை பாய்ச்சி வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.

    தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் ஒரு முறையும், பின்னர் 4 மாதங்கள் இடைவெளி விட்டு ஆவணி மாதத்தில் ஒரு முறையும் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரிய கதிர்கள் படும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் ஒவ்வொரு முறையும் சூரிய கதிர்கள் லிங்கத் திருமேனி மீது படும்.

    இந்த ஆண்டு சித்திரை மாத சூரிய வழிபாடு நடைபெற்ற முடிந்த நிலையில் ஆவணி மாத சூரிய வழிபாடு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 18-ந் தேதி லேசாக சூரிய கதிர்கள் திருமேனி மீதுபட்டது. அடுத்த இரண்டு நாட்கள் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய வழிபாடு நடைபெறவில்லை. நேற்று காலை 6 மணி 5 நிமிடத்திற்கு சூரிய பகவான் தனது ஆயிரம் கரங்களை நீட்டி காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் பாதங்களை சரணாகதி அடைந்த நிகழ்வு நடந்தேறியது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சிறிது சிறிதாக லிங்கத் திருமேனி மீது முழுவதும் சூரிய கதிர்கள் படர்ந்து லிங்க திருமேனி தங்கத்தை உருக்கி ஊத்தியது போல் தகதகவென மின்னியது.

    இந்த காட்சியை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர். பின்னர் சூரிய பகவானுக்கும் பசுபதீஸ்வரர் சவுந்தரநாயகி தாயார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்த அதிசய நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டு வருகின்றனர்.

    ×